டில்லி:
காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்திய அரசு அப்பட்டமாக அரசியல் செய்கிறது என்று அ.தி.மு.க. எம்.பியும், மாநிலங்களவை துணைத்தலைவருமான தம்பித்துரை குற்றம் சாட்டினார்.
காவிரி மேலாண்மை அமைக்க உச்சநீதிமன்றம் கடந்த 30 ஆம் தேதி உத்தரவிட்டது. முதலில்  இதற்கு ஒப்புக்கொண்டமத்திய அரசு பிறகு, பின் வாங்கியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தது.
download
இதை கண்டித்தும் தமிழகத்தின் நிலையை தெளிவுபடுத்தவும் அதிமுக மாநிலங்களவை துணைத்தலைவர் தம்பித்துரை தலைமையில் அதிமுக எம்பிக்கள் குழு பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று மனு  அளிக்கச் சென்றனர்.
அவர்களை சந்திக்க பிரதமர் அலுவலகத்தில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.   நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஏழு பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் அலுவலகத்துக்குள் சென்ற அவர்கள் பிரதமரின் தனிச்செயலரிடம் மனு அளித்தனர்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை தெரிவித்ததாவது:
“காவிரி நீர் விவகாரத்தால் வர்த்தகம் , போக்குவரத்து, விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் பிரதமர் தலையிட வேண்டும் என்று கேட்டு வந்துள்ளோம். ஆனால் பிரதமர் சந்திக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு எங்களை அழைத்து பேச வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்துள்ளோம். காவிரி மேலாண்மை வாரியத்தை நான்காம் தேதிக்குள் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது அட்டர்னி ஜெனரல் ரோத்னிக்  ஒப்புக்கொண்டார்.
உறுப்பினர்கள் பெயரை பரிந்துரைக்குமாறு, நான்கு மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பினார். தமிழகமும் பிரதிநிதி பெயரை பரிந்துரைத்தது. ஆனால் திடீரென மத்திய அரசு, பின்வாங்குகிறது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
எங்கள் முதல்வர் நீதிமன்றத்தில் போராடி மேலாண்மை வாரியம் அமைக்க சட்டத்தின் மூலம் வழி ஏற்படுத்தினார். ஆனால் மத்திய அரசு முரண்பட்டு நடந்துகொள்கிறது.  இதை கண்டிக்கிறோம். இதில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஜெயலலிதா முடிவெடுப்பார். மத்திய அரசு இந்த விவகாரத்தில் அப்பட்டமாக அரசியல் செய்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இருந்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருக்க வேண்டும். இப்போது திடீரென பாராளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று பல்டி அடிக்கிறார்கள். கிருஷ்ணா திட்டம், கங்கை திட்டம் எல்லாம் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றியா செய்தார்கள்?
30 ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் சொன்ன போது ஒத்துகொண்ட மத்திய அரசு மூன்று நாள் கழித்து தனது நிலையை மாற்றிகொண்டது ஏன். 30 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டபோது இது தெரியாதா?
காவிரி நீர் இவர்களுக்கு சொந்தமானது அல்ல மேகம் எங்கிருந்தோ திரண்டு அங்கு பொழிகிறது.  அதை அணைக்கட்டி தேக்குகிறார்கள். அணைக்கட்டுவது வெள்ளத்திலிருந்து பாதுக்காக்க தானே ஒழிய இது போல் நீரை தேக்கி அடுத்த மாநிலத்துக்கு தராமல் செய்வதற்காக அல்ல.
வெள்ளம் வரும் போது தண்ணீரை திறந்து விடுவதும், இது போன்ற சமயங்களில் நீரை திறக்காமல் இருப்பதும் இவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது” என்று தம்பி துரை தெரிவித்தார்.