காவிரி விவகாரத்தில் பாஜ கர்நாடகாவுக்கே ஆதரவு: பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் ஒப்புதல்

பெங்களூரு:

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பாஜக செயல்படாது என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்தாக மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடந்த 15 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசியல் கட்சியினர், விவசாயிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு வகையிலான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கிடையில்,  கடந்த வாரம் தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புகொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக அவர் சாலை பயணத்தை தவிர்த்து ஹெலிகாப்டர் மூலமே தனது பயணத்தை மேற்கொண்டார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து திமுக தலைமையில் இன்று பிற்பகல் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில்,பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தார்,  அப்போது. காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பாஜக செயல்படாது என்று  கூறினார். மேலும்,  இது குறித்து கர்நாடக தேர்தல் அறிக்கையிலும் வெளியிடுவோம்  என்று கூறியவர்,  காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பாஜகவின் பங்கு பெரிய அளவில் உள்ளது என்றும் கூறினார்.

இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே உச்சநீதி மன்றம் உத்தரவிட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்போக்கில் நடத்தி வரும்   மத்திய பாஜக அரசுக்கு எதிராக தமிழக மக்கள் கொந்தளிப்பாக உள்ள நிலையில், தற்போது பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் கர்நாடகாவுக்கு ஆதரவாக   கூறியிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால், தமிழக பாஜக தலைவர் தமிழிசையோ,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழகத்திற்காக பாடுபடுவேன் என்றும்,காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கு நல்ல தகவல் கிடைக்கும் என்றும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.