காவிரி விவகாரம்: பிரதமர் மோடியை இன்று மாலை சந்திக்கிறார் கர்நாடக முதல்வர்

பெங்களூர்:

பிரதமர் மோடிய கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று மாலை சந்தித்து பேச இருக்கிறார். அப்போது காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கர்நாடக முதல்வராக பதவி ஏற்ற குமாரசாமி  கடந்த மாதம் (மே) 28ந்தேதி மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, கடந்த வாரம் விராட் கோலியின் சவாலுக்கு பதிலாக தனது யோகா உடற்பயிற்சி குறித்த பிட்னஸை வெளியிட்டு,  கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு பிட்னஸ் சவால் விடுத்திருந்தார். அதற்கு, குமாரசாமி தனது பிட்னஸைவிட மாநில பிட்னஸ்தான் முக்கியம் என்று பதில் கூறியிருந்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று டில்லி செல்லும் முதல்வர் குமாரசாமி பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த சந்திப்பின்போது, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரியில் தண்ணீர் திறந்து விடுப்பது குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது கர்நாடகாவில் காவிரி மழைப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி, கிருஷ்ணசாகர் போன்ற அணைகள் நிரம்பி உள்ளன. இதைத்தொடர்ந்து,   கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

உச்சநீதி மன்ற உத்தரவுபடி  காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் பணிகள் இன்னும்  முழுமையாக முடிவடையாத நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு, மோடியை குமாரசாமி சந்திக்க இருக்கிறார்.  அரசியல் களத்தில் இது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.