டில்லி:

காவிரி பிரச்சினையில் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தாமல், தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. இந்நிலையில் வழக்கின் விசாரணையை மீண்டும் வரும் 8ந்தேதிக்கு உச்சநிதி மன்றம்  ஒத்தி வைத்துள்ளது.

ஏற்கனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சொன்னதை செயல்படுத்தாமல் காலம் தாழ்த்திய மத்திய அரசு, தொடர்ந்து காவிரி நதி நீர் பங்கீடு குறித்து  வரைவு திட்டம் தயாரிக்க உத்தரவிட்டதையும் செயல்படுத்தாமல், கர்நாடக தேர்தலை காரணம் காட்டி அவகாசம் கோரி உள்ளது.

இந்நிலையில், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதி மன்றம், காவிரி நதி நீர் பங்கீடு குறித்து இதுவரை  மேற்கொண்ட பணிகளை அறிக்கையாக தாக்கல் செய்ய  மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுவது குறித்து எங்களுக்கு கவலையில்லை என்ற உச்சநீதி மன்றம், தங்களின் உத்தரவை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக கூறியது.

அதைத்தொடர்ந்து  வழக்கு விசாரணையை வரும் 8ந்தேதி (அடுத்த செவ்வாய்கிழமை)க்கு ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்.

மேலும் ஏற்கனவே காவிரி வழக்கில் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ள படி, கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை வழங்க வேண்டும் என்றும், மே மாதம் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய 4 டிஎம்சி தண்ணீரை உடனே கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. தவறினால் கடும் விளைவுகளை கர்நாடகா சந்திக்க நேரிடும் என நிதிபதிகள் எச்சரித்தனர்.