சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மத்திய நீர்வளத்துறை செயலாளரின் விளக்கம் குறித்தும், நேற்று நடைபெற்ற கா.மே.வா. அமைப்பது குறித்து நடைபெற்ற அதிகாரிகளின் மட்டத்திலான ஆலோசனை குறித்தும் இன்று மதியம் முதல்வர் எடப்பாடி தலைமையில் அவசர கூட்டம் நடைபெற உள்ளளது.

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்துவது மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில தலைமைச் செயலர்கள் கலந்து கொண்ட கூட்டம்  மத்திய நீர்வளத்துறை செயலர், தலைமையில்  நேற்று டில்லியில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து   நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள், வழிமுறைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆலோசனையின் முடிவில், காவிரி மேலாண்மை வாரியத்தில் இடம்பெற உள்ள அந்தந்த மாநில பிரதிநிதிகளின் பெயர் பட்டியலையும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக 4 மாநிலங்களும் தங்கள் செயல் திட்டங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த கூட்டத்தில் பேசிய பேசிய  மத்திய நீர்வளத்துறை செயலாளர் உ.பி.சிங், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடவில்லை என்றும்,  காவிரி நீரை வழங்குவதை கண்காணிக்க ஒரு ஸ்கீம் மட்டுமே அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொன்னதாக புதிய விளக்கத்தையும்  அவர் கூறி உள்ளார்.

இது தமிழகத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், காவிரி பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று  மதியம் அவசர கூட்டம் நடக்க உள்ளது.

இந்த கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் நேற்றைய டில்லி ஆலோசனை  கூட்டத்தில் பங்குபெற்ற  தலைமைச் செயலாளர் கிரிஜா உள்பட  அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்