சென்னை:
காவிரி பிரச்சினை காரணமாக சென்னையில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது தீ குளித்த விக்னேஷ் இன்று மரணமடைந்தார். அவரது உடலை பார்த்து தாய், தந்தை, சகோதரி கதறி துடித்தது அனைவரின் கல்மனதையும் கரைய வைத்தது.
1vignes2
நேற்று நடைபெற்ற  சீமான் பேரணியில் தீக்குளித்த திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவரணி பாசறை செயலாளர் விக்னேஷ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்றைய  போராட்டத்தின்போது தன் மீது தீவைத்துக் கொண்ட விக்னேஷ்,  படுகாயமடைந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவரது உடலில்  95 சதவீத தீக்காயம் ஏற்பட்டிருப்பதால் உயிர் பிழைப்பது கடினம் என்று டாக்டர்கள் கூறி விட்டனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் மணம் அடைந்தார்.
விக்னேஷ் தீக்குளித்தத செய்தி அவரின் சொந்த ஊரில் இருந்த பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.  செய்தி அறிந்ததும் அவரது பெற்றோரும், அக்காவும் கதறித் துடித்தனர். உடனடியாக மன்னார்குடியிலிருந்து கிளம்பி சென்னைக்கு ஓடி வந்தனர். மருத்துவமனையில் தீயின் கோரபிடியில் எரிந்து கரி கட்டையாக கிடந்த தங்களது பிள்ளையைப் பார்த்து அலறி துடித்தனர்.
தீக்குளித்த விக்னேஷுக்கு 26 வயதே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விக்னேஷின் தந்தை பாண்டியன், விவசாயி. இவரது மனைவி கண்ணகி. வீட்டில் தையல் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இவர்களது மகன்தான் விக்னேஷ். விக்னேஷுக்கு ஜனனி என்ற மூத்த சகோதரி உள்ளார். இவருக்குத் திருமணமாகி விட்டது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கோபாலசமுத்திரம் பகுதியில் வசித்து வருகிறார்கள்.
விக்னேஷ் மன்னார் குடியில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு,  நாமக்கல்  பாலிடெக்னிக்கில் டிஎம்இ படித்தார். அதன் பின்னர் சென்னைக்கு வந்த அவர் டிஎஸ் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தார். அதையடுத்து, அம்பத்தூர் டிஐ சைக்கிள் நிறுவனத்தில் மெக்கானிக்காக சேர்ந்தார். கடந்த ஒறு வருடமாக அங்கு வேலை பார்த்து வருகிறார.
விக்னேஷுக்கு சீமானின் ஆக்ரோஷமான பேச்சு பிடிக்கும். அதன் காரணமாக  அவருக்கு நாம் தமிழர் கட்சியில் ஈடுபாடு ஏற்பட்டு அதில் இணைந்தார். நாம் தமிழர் கட்சி நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக திருவாரூர் மாவட்ட மாணவர் பாசறை செயலாளராக நிமிக்கப்பட்டு செயல்பட்டு வந்துள்ளார்.
நேற்று சென்னையில் நாம் தமிழர் கட்சி பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெறும் செய்தி அறிந்து, விக்னேஷும் அந்த பேரணியில் கலந்துகொண்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
இளம் வயதிலேயே காவிரி போராட்டத்துக்கு தனது உயிரை பலியிட்டிருப்பது அரசியல்வாதிகள் மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.