சென்னை:

காவிரி நதி நீர் விவகாரத்தில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில் நாளை நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு விவசாய அமைப்புகளையும் அழைக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

காவிரி நதி நீர் மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 16ந்தேதி உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில்  காவிரி நதியை உரிமை கோர எந்த மாநிலத்துக்கும் உரிமை இல்லை என்றும், காவிரி நீரை எந்த மாநிலமும் தனியாக உரிமை கோர முடியாது, நதி நீர் என்பது தேசிய சொத்து என்று தெரிவித்த  உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 192 டிஎம்சி தண்ணீரை  177.25 டி.எம்.சியாக குறைத்துவிட்டது.

இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தீர்ப்பு குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 23 ம் தேதி திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ள நிலையில், 22ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது.

அதைத்தொடர்ந்து திமுக கூட்டுவதாக இருந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்து, திமுகவும் அரசின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளும் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும், அரசின் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு விவசாய சங்கத்தினரையும் அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அதுபோல தமிழக விவசாய சங்கத்தினரும் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு விவசாய சங்க நிர்வாகிகளையும்  அழைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

முதலமைச்சராக  பழனிச்சாமி பதவியேற்றபின் நடைபெற உள்ள முதல் அனைத்துக்கட்சி கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.