காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமிக்க கோரி தமிழகஅரசு வழக்கு

டில்லி:

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவராக ஒருவரை  நியமிக்கக்கோரி உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழகத்திற்கும், கர்நாடகாவுக்கும் இடையே பல ஆண்டு காலமாக நிலவி வரும் காவிரி நீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க  கடந்த மே மாதம் 18ந்தேதி உச்சநீதி மன்றம் வரலாற்று சிறப்பு மிக்க  தீர்ப்பு வழங்கியது.  அதைத் தொடர்ந்து,. காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து அரசிதழில் வெளியிட்டது. காவிரி நீர் தொடர்பான அனைத்து விவரங்களையும் கவனிக்கும் அதிகாரம் மிக்க அமைப்பாக உருவானது காவிரி மேலாண்மை ஆணையம்.

இந்த ஆணையத்துக்கு மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக இருக்கும்  மசூத் உசைனையே  காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் ஆணையத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில் மேகதாது அணை விவகாரத்தில், அவர் இரட்டை வேடமிட்டு அரசியல் செய்து வருகிறார். நீர் வளத்துறை ஆணையர் என்ற முறையில், அவர் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக அனுமதி வழங்கிவிட்டு, காவிரி ஆணைய தலைவராக, மேகதாது அணை கட்ட காவிரி ஆணையம் அனுமதி தேவை என்று கூறி தமிழகத்துக்கு ஆதரவாக செயல்படுவதுபோல நடந்து வருகிறார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உசைனின் நடவடிக்கை குறித்து தமிழக எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடின. இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க கோரி  தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவில்,  “காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவரான மசூத் உசேன் பாரபட்சமாக செயல்படுகிறார். எனவே, அவர் ஆணைய தலைவராக நீடிப்பது பொருத்தமற்றது. மசூத் உசேன் இரட்டைப் பதவி வகிப்பதால் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழுநேர தலைவரை நியமிக்க மத்திய நீர்வளத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என தமிழக அரசு கூறியுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும்  என எதிர்பார்க்கப்படுகிறது.