தண்ணீர் திறந்துவிட கர்நாடகா மறுப்பு: ஜூன் 24ந்தேதி மீண்டும் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்!

டில்லி:

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுத்து விடும் கர்நாடகாவின் நடவடிக்கை குறித்து விவாதிக்க மீண்டும் ஜூன் 24ந்தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

டில்லியில் கடந்த மே 28ந்தேதி  நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், மத்திய நீர்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில்  அதன்  தலைவர்  தலைவர் மசூத் உசேன் தலைமையில் தொடங்கியது. இதில், தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், கர்நாடகா சார்பில் நீர்வளத் துறை செயலாளர் ராகேஷ் சிங், கேரளாவின் நீர்வளத் துறை செயலாளர் டிங்கு பிஸ்வால், புதுச்சேரி சார்பில் பொதுப்பணித் துறை ஆணையர் அன்பரசு ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது, தமிழகத்துக்கு ஜூன் மாத பங்காக 9.19 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிலி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

ஆனால், கர்நாடக மாநில அரசு இதுவரை தண்ணீர் திறப்பது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக தமிழகத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கர்நாடகா அரசின் நடவடிக்கை குறித்து  ஆலோசிக்க ஜூன் 24ல் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம் கூடுவதாக  ஆணைய தலைவர் மசூத் உசேன் கூறி உள்ளார். இதுதொடர்பான கூட்டத்தில்  பங்கேற்க தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி பிரதிநிதிகளுக்கு காவிரி ஆணையம் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.