5மாதத்திற்கு பிறகு இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்! தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடப்படுமா?

டில்லி :

காவிரி மேலாண்மை  ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் 5 மாதங்களுக்கு பிறகு இன்று டில்லியில்  நடைபெற உள்ளது. இதில் தமிழகத்துக்கான நீரை திறக்க கர்நாடகத்துக்கு ஆணையிடுமா  என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும்  மத்திய அரசு அமைத்து  உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து காவிரி  நீர் பங்கீடு தொடர்பாக உத்தரவு பிறப்பிக் கும் அதிகாரம் ஆணையத்திற்கே  உள்ளது. மேலும், காவிரி நீர் தொடர்பான அனைத்து விவரங்களையும் கவனிக்கும் அதிகாரம் மிக்க அமைப்பாக  காவிரி மேலாண்மை ஆணையம்  உருவாகி உள்ளது.

இந்த நிலையில்,  காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. உச்சநீதி மன்ற உத்தரவுபடி மாதம் ஒருமுறை கூட வேண்டிய இந்த கூட்டம்  கடந்த 5 மாதங்களாக நடைபெறாத நிலையில், விவசாயிகள் போர்க்கொடி தூக்கினர். அதைத்தொடர்ந்து தற்போது காவிரி ஒழுங்காற்று கூட்டம் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்  நடைபெறும் என மத்திய நீர்வளத்துறை அறிவித்தது.

அதன்படி கடந்த  23ம் தேதி டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், தமிழகத்துக்கான நீரை திறந்துவிட வேண்டும் என்றக் கோரிக்கையை கர்நாடகா நிராகரித்தது.

இந்த நிலையில், மத்திய நீர்வளத்துறை தலைவர் மசூத் உசேன் தலைமையிலான காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில், தமிழகத்துக்கான 9.2 டி.எம்.சி. நீரை ஜூன் மாதம் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடப்படுமா என்று எதிர்பார்க்கப்படு கிறது.

கார்ட்டூன் கேலரி