பெங்களூரு:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் குறித்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இன்னும் ஆறு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், “பொதுவாக எந்த ஒரு நதிநீர் விவகாரமாக இருந்தாலும், மேலாண்மை வாரியம் அல்லது, கண்காணிப்பு குழு அமைப்பது வழக்கம்தான். காவிரி விவகாரத்தில் கண்காணிப்பு குழு ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. ஆகவே மேலாண்மை வாரியம் அமைக்க தேவையில்லை” என்றார்.

மேலும், “மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்கும்” என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று, “ காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து எங்களது எதிர்ப்பை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்வோம். இது குறித்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு அளிப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.