தஞ்சாவூர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசை கண்டித்து திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  தஞ்சாவூர் தலைமை தபால்நிலையம் முன்பு உண்ணா விரத போராட்டம் ஆரம்பமானது. இந்த உண்ணா விரதத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.
திமுக முன்னணி நிர்வாகிகளான  துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்பட ஏராளமான திமுகவினரும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
kaviri1
காவிரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
‘தமிழகத்திற்கு, வினாடிக்கு, 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும்’ என, காவிரி கண்காணிப்பு குழு, 19ம் தேதி உத்தரவிட்டது. அதே நேரம், ‘வரும், 27ம் தேதி வரை, வினாடிக்கு, 6,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும்’  கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட், 20ம் தேதி உத்தரவிட்டது.
இதன் காரணமாக கர்நாடகத்தில் கலவரம் ஏற்பட்டது. தமிழ்நாடு, கர்நாடக இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து கொளுத்தப்பட்டது.
மேலும் கர்நாடக அரசு அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் விவாதித்து தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என முதல்வர் சித்தராமையா கூறினார்.
 
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எதிர்த்து  கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை கர்நாடக சட்டப்பேரவையில் அம்மாநில எதிர்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் முன் மொழிந்தார். கர்நாடக சட்டமேலவையில் எதிர்கட்சி தலைவர் ஈஸ்வரப்பா முன் மொழிந்த தீர்மானம் நிறைவேறியது.
ஆனால், சுப்ரீம் கோர்ட்டோ கர்நாடக சட்டபேரவை தீர்மானம் தங்களை கட்டுப்படுத்தாது என கூறி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், ‘காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, நான்கு வாரங்களுக்குள், காவிரி மேலாண்மை
வாரியத்தை அமைக்க வேண்டும்’ என்றும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தர விட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் உச்ச நீதிமன்ற உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி ஏற்கக் கூடாது என முன்னாள் பிரதமர் தேவகவுடா திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
இதையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஏதுவாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் இருந்து, காவிரி மேலாண்மை வாரியத்துக்கு உறுப்பினரை நியமிக்கும்படி பரிந்துரை கடிதம் வந்தது. இதையடுத்து உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டது.
kavir2
ஆனால், அடுத்த நாள் விசாரணையின்போது, மத்தியஅரசு அந்தர் பல்டி அடித்துவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் தற்போது அமைக்க முடியாது என்று கூறி, வாரியம் அமைக்கும் முடிவுக்கு முட்டுக்கட்டை போட்டது.
இதனையடுத்து தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் தற்கொலை போராட்டம் நடத்தி, கைதாயினர்.
திமுக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவிப்பு வெளியிட்டடார்.
அதன்படி திமுக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறது.