கோவை:

காவிரி பிரச்சினையில் உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று 4வது நாளாக திமுக, காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சியினர், விவசாயிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில, கோவையில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.

கோவையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

மேலும், கோவையில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. செல்வபுரம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது, கழுத்தில எலும்புக்கூடு அணிந்து போராட்டம் நடத்தினர்.

அதுபோல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து,  பாடை கட்டி, ஒப்பாரி வைத்து போராட்டம்  நடைபெற்றது.

மற்றொரு இடத்தில் போராட்டக்குழுவினர் எலிக்கறி தின்னும் போராட்டத்தை நடத்தினர். வாயில் எலி பொம்மையை கடித்துக்கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

மேலும் பல இடங்களில் சாலை மறியல், ரயில் போராட்டமும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கோவை மாவட்டம் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்து உள்ளது.

பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.