தஞ்சாவூர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூரில் விவசாயிகள்  ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக  ரயில் போக்குவரத்து தடை பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பல வகையான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சாலை மறியல், ரயில் மறியல், மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை என பல வகையான போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றன.

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், காவிரி உரிமை மீட்புக் குழுவினர்  இன்று தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியிலிருந்து சென்னை நோக்கி செல்லும் சோழன் விரைவு ரயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் சில மணிநேரங்கள் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

இதே போல தஞ்சாவூரில் சோழன் விரைவு ரயிலை மறித்து காவிரி உரிமை மீட்பு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுபோல திருச்சியில் அகில இந்திய வானொலி நிலையத்தை முற்றுகையிட்டு காவிரி உரிமை மீட்புக்குழு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 திருவாரூரில் விவசாயிகள் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அமமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது.  தருமபுரியில் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு டி.டி.வி தினகரன் போராட்டம் நடத்தினார்.

 

சென்னை ஆவடி அருகே இந்திய உணவு கழக கிடங்கை முற்றுகையிட்ட நாம்தமிழர் கட்சியினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் இன்றும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.