காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றே நியாயமான தீர்வு: ரஜினிகாந்த்

--

சென்னை:

காவிரி விவகாரத்தில், உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நியாயமான தீர்வு என்று அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்றத்தின் கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் மத்திய பாஜக அரசு மவுனம் சாதித்து வருகிறது.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இதற்கிடையில், கர்நாடக மாநில அரசோ, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் விளைவுகளை மத்திய அரசு சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்துள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், புதிய டுவிட் பதிவிட்டுள்ளார்.

அதில், ”காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும்”  என்று கூறி உள்ளார்.

சமீபத்தில் காவிரி தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்த ரஜினிகாந்த், தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.