பெங்களூரு: 

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு ஜூன் மாதம் கொடுக்க வேண்டிய தண்ணீரை திறந்துவிடும்படி கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், எங்களுக்கு தண்ணீர் வந்தால், தமிழகத்துக்கு தருகிறோம் என்று கர்நாடக அமைச்சர்கள் சி.எஸ்.புட்டராஜூ, டி.கே.சிவக்குமார் தெரிவித்து உள்ளனர்.

கர்நாடக அமைச்சர்கள்

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து காவிரி பிரச்சினையை கையாள  காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் கூட்டம் நேற்று டில்லியில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து,  கர்நாடகம் ஜூன் மாதத்திற்கான 9.19 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீரை, தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

ஆனால், கர்நாடக மாநில அரசு எப்போதும்போல, தற்போது உச்சநீதி மன்ற தீர்ப்பையும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் மதிக்காமல் பேசி வருகிறது.

செய்தியாளர்களை சந்தித்த மண்டியா மாவட்ட பொறுப்பு மந்திரியும், சிறிய நீர்ப்பாசனத்துறை மந்திரியுமான சி.எஸ்.புட்டராஜூ,  போதிய மழை இல்லாததால், கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை. தற்போதுள்ள உள்ள நீர், குடிநீர் பயன்பாட்டுக்கு மட்டும்தான் உள்ளது. ஆனால் 9.19 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு திறக்க வேண்டும் என்று காவிரி ஆணையம் உத்தரவிட்டி ருப்பது சரியல்ல.  மழை பெய்து கர்நாடகத்தில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜ சாகர்) ஆகிய அணைகளுக்கு நீர் வந்தால், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்போம் என்று தெரிவித்துள்ளார்.

அதுபோல  கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் கூறும்போது,  காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு குறித்து நாங்கள் விவாதித்தோம். அந்த ஆணையத்தின் உத்தரவை நாங்கள் மதிக்கிறோம். அணைகளுக்கு நீர்வரத்து இருக்கும்போது, தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை.

அணைகளுக்கு நீர்வரத்து குறித்து ஆய்வு செய்து முடிவு எடுப்போம். ஒருவேளை நீர் இல்லாத நிலை ஏற்பட்டால், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்து முடிவு எடுப்போம்.

கர்நாடகத்தின் நலனையும், கோர்ட்டின் உத்தரவையும் காப்போம். கர்நாடகத்தில் பா.ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தண்ணீர் பிரச்சினை குறித்து அவர்கள் குரல் எழுப்புவார்கள். இந்த பிரச்சினையை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.