காவிரி பிரச்னைக்கு சட்ட ரீதியாக தீர்வு காண முடியாது!: கர்நாடக முதல்வர் குமாரசாமி அதிரடி  

காவிரி உரிமைக்காக தொடர்ந்து தமிழக அரசு சட்டப்போராட்டம் நடத்தி வரும் நிலையில், “காவிரி பிரச்னைக்கு சட்ட ரீதியாக தீர்வு காண முடியாது” என்று அதிரடியாக கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். மேலும், “இந்தப் பிரச்சினையை பேசித்தான் தீர்க்க வேண்டும்.  தமிழகமும் கர்நாடகமும் இந்தியா- பாகிஸ்தான் இல்லை” என்று கிண்டலாகவும் தெரிவித்திருக்கிறார்.

காவிரி ஆற்றில் புதிதாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டிருக்கிறது.  தமிழக எல்லைப் பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ள இந்த அணை மூலம் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றவும், 400 மெகாவாட் மின்உற்பத்தி நிலையத்தை ஏற்படுத்தவும்  அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது.

மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணைக் கட்ட சாத்தியக்கூறு உள்ளிட்ட பல தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது. இந்த அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

ஏற்கெனவே, காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை வழங்க மறுக்கிறது கர்நாடகா. இந்த நிலையில் மேலும் ஒரு அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீர்கூட வராது என்பது நிதர்சனம். ஆகவே விவசாயிகளும் அனைத்து கட்சியினரும் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவித்ததோடு இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி, “ 125 ஆண்டு கால காவிரி நீர் பிரச்னைக்கு சட்ட ரீதியாக தீர்வு காண முடியாது என்று தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “காவிரி நீர் பிரச்னையை பேசி தீர்க்க தமிழகம் முன்வரவேண்டும். கர்நாடக அரசையும், மக்களையும் தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சியினர் தங்கள் சகோதரராக பார்க்க வேண்டும். நாம் இந்தியா, பாகிஸ்தான் குடிமகன்கள் அல்ல. நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள். காவிரி பிரச்னைக்கு சட்டப்பூர்வமாக தீர்வு காண முடியாது. இரு தரப்பும் அமர்ந்து பேசிதான்   சரி செய்யமுடியும். பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என தமிழக முதலமைச்சர், அரசியல் கட்சியினருக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். நாம்   பேசினால் தான் 125 ஆண்டு கால பிரச்னைக்கு தீர்வு காண முடியும்” என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் அரசியல் விமர்சகர்கள், “சட்டபூர்வமாக காவிரி பிரச்சினையை தீர்க்க முடியாது என்று குமாரசாமி சொல்வது இந்திய சட்டத்தை மதிக்காத செயல். மேலும், இரு மாநிலத்தவரும் இந்திய – பாகிஸ்தானியர் அல்ல என்று கிண்டலாக தெரிவித்திருக்கிறார்.

அவருக்கு புவியியலோ, வரலாறோ தற்கால அரசியலோ தெரியவில்லை. இந்தியா – பாகிஸ்தான் இடையே ஒரு நதி அல்ல.. பியாஸ், சட்லஜ், ரவி, செனாப், ஜீலம்,  சிந்து என்று ஐந்து நதிகள் ஓடுகின்றன.

இந்த நதிகளின் நீரை இரு நாடுகளும் முறையாக பகிர்ந்துகொள்ள சிந்து நதி ஆணையம் அமைக்கப்பட்டது. வருடாவருடம் இந்த ஆணையம் கூடி நதிநீர் பகிர்வு தொடர்பாக ஆலோசனை செய்கிறது.

ஆக.. இந்தியா பாகிஸ்தான் இடையே நதிநீர் ஒப்பந்தம் சுமுகமாக அமல்படுத்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

இந்தியாவுக்குள்தான் கர்நாடகம், சக மாநிலமான தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது” என்று தெரிவிக்கின்றனர்.