டில்லி,
காவிரி உயர்மட்ட தொழில்நுட்ப குழுவினர் அறிக்கை இன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படுகிறது.
காவிரி விவகாரத்தில், தமிழகம்,கர்நாடகாவில் ஆய்வு நடத்திய, உயர் மட்ட தொழில் நுட்பக் குழுவினர், உச்ச நீதிமன்றத்தில், இன்று ஆய்வு அறிக்கை தாக்கல் செய்கின்றனர்.
தமிழகத்தின் பாசனம் உள்ளிட்ட தேவைகளுக் காக, ஆண்டு தோறும், 192 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். செப்டம்பர் வரை, 134 டி.எம்.சி., வழங்க வேண்டும்; ஆனால் குறிப்பிட்டபடி தண்ணீர் வழங்க மறுத்து வருகிறது. இதனால் சம்பா சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது.
kaviri
இதனால் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரியும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத் தியும், உச்ச நீதிமன்றத்தில்,தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ‘காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்’ என, உத்தரவிட்டது.  ஆனால், வாரியம் அமைக்க முதலில் ஒத்துக்கொண்ட மத்திய அரசு, கர்நாடகாவை சேர்நத் மத்திய அமைச்சர்களின் மிரட்டலால்,  ‘வாரியத்தை தற்போதைக்கு அமைக்க முடியாது’ என, மத்திய அரசு சுப்ரீம கோர்ட்டில் கூறிவிட்டது.
அதையடுத்து, உச்ச நீதி மன்றம், காவிரி உயர்மட்ட தொழில்நுட்ப குழுவை அமைக்க உத்தரவிட்டது. அதன்படி  மத்திய நீர்வள கமிஷனர் சி.எஸ்.ஷா தலைமை யில், காவிரி உயர்மட்ட தொழில்நுட்ப குழுவை அமைத்தது.
இந்தத குழுவில் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் உயர் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
தமிழக அரசு சார்பில், பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் இடம் பெற்றனர்.
ஜி.எஸ்.ஷா தலைமையிலான  உயர்மட்டக் குழுவினர் கடந்த 7 மற்றும் 8ந் தேதிகளில், கர்நாடக மாநிலத்திற்கு சென்று, அங்குள்ள அணைகள், காவிரி பாசன பகுதிகளை ஆய்வு செய்தனர்.
அதையடுத்து தமிழகம் வந்த குழுவினர், கடந்த 9ந்தேதி மற்றும் 10ந்தேதி மேட்டூர், பவானிசாகர் அணைகளையும், டெல்டா மாவட்டங் களான, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினத் தில் உள்ள காவிரி பாசன பகுதிகளையும் ஆய்வு செய்தனர். அவர்களிடம் விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் சம்பா பயிர்கள் காய்ந்து போவதை  கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
ஆய்வை முடித்த மத்திய குழுவினர் 11ந்தேதி, தமிழக அரசின் தலைமைச் செயலர் ராமமோகன் ராவ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
supreme court
அவர்களிடம்,  தமிழகத்தின் தண்ணீர் தேவை குறித்தும், பயிர் பாதிப்பு குறித்தும், ‘வீடியோ’ ஆதாரங்களுடன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆய்வு குழுவினரின் அறிக்கை, உச்ச நீதிமன்றத்தில், இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழகத்தின் உண்மை நிலையை விளக்கும் வகையில், குழுவினரின் அறிக்கை அமையும் என, டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
காவிரி வழக்கு, மூன்று நீதிபதிகள் இடம் பெற்ற, உச்ச நீதிமன்ற அமர்வு முன், நாளை (18ந்தேதி) விசாரணைக்கு வர உள்ளது.
அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்தும், காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறப்பது குறித்தும், நீதிபதிகள் எந்த வகையான  உத்தரவிடுவர் என, தமிழக விவசாயிகள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.