சென்னை:

ற்கெனவே காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பில் தெரிவித்திருந்ததைவிட மேலும் குறைவான நீரை தமிழகத்துக்கு ஒதுக்கியிருக்கிறது இன்றைய உச்சநீதிமன்ற தீர்ப்பு. இது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தீர்ப்பு குறித்த தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

அரசியல் கட்சி துவங்கப்போவதாக தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசனும் கருத்து தெரிவித்துள்ளார்.

அவரைப்போலவே, கட்சி துவங்க இருப்பதாக அறிவித்துள்ள ரஜினியே இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இன்று அவர் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாக, அவரது வீட்டு முன் செய்தியாளர்கள் காத்திருக்கிறார்கள். வீட்டினுள்தான் ரஜினி இருக்கிறார்.

இப்படி ரஜினி அமைதி காக்க காரணம் என்று ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.

அந்த சம்பவம்:

காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி ஒரு முறை பேசிவிட்டார். அவர் நடித்த, குசேலன் படம் வெளியான நேரம் அது. அந்த படத்தை திரையிட கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியது.

கர்நாடகா சென்ற ரஜினி, கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

“குசேலன் படம் கர்நாடகத்தில் வெளியாக ஒத்துழைப்பு கொடுங்கள். நீங்கள் கன்னடத்துக்காக போராடுங்கள். உங்கள் போராட்டத்துக்கு ஊக்கம், ஒத்துழைப்பு கொடுக்க தயார். இதற்கு முன் ஏதோ தவறாக பேசிவிட்டேன்” என்றார்.

ரஜினிகாந்தின் அறிவிப்பை தொடர்ந்து கர்நாடக ரக்ஷண வேதிகே அமைப்பின் தலைவர் நாராயணகவுடா, “ ரஜினி மன்னிப்பு கேட்டதால், குசேலன் படத்துக்கு எதிரான போராட்டத்தை விலக்கிக் கொள்கிறோம்.. படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம்” என்றார்.

அப்போது குசேலன் என்றால், இப்போது காலா படம் ரிலீஸ். ஏப்ரல் 27ம் தேதி இப்படம் கர்நாடகாவிலும் வெளியாகிறது. ஆகவேதான் ரஜினி அமைதிகாக்கிறார் என்று கூறப்படுகிறது.

இது வரலாறு.

தமிழகத்தின் உச்ச நட்சத்திரம் என்கிற ரஜினிகாந்தின் நிலையே இதுதான்.

இப்படிப்பட்ட சூழலில், “திரைத்துறையினர் காவிரி பிரச்சினைக்காக குரல் கொடுக்க வேண்டும்” என்று எதிர்பார்ப்பது எப்படி சரியாகும் ?

கன்னட நடிகர்கள் அவர்களுக்காக போராடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு தமிழகத்தில் மார்க்கெட் இல்லை. ஆனால் தமிழக நடிகர்களுக்கு (நடித்த படங்களுக்கு) கர்நாடகத்தில் மவுசு உள்ளது. ஆகவே பேச மாட்டார்கள்.

நடிகர்களது கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யவும் வேண்டாம், பிரச்சினைக்கு குரல் கொடுங்கள் என்று கோரிக்கை வைக்கவும் வேண்டாம்.