மேலூர் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு: நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் மெத்தனம்

--

மேலூர் அருகே நான்குவழிச் சாலையில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வரும் நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகமெங்கும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தினசரி தண்ணீர் பொங்கி வெளியேறி வீணாகி வருகிறது.மேலூர் நகராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் தண்ணீரே இதுவரை கைகொடுத்து வருகிறது. நகராட்சியை சுற்றி ஆழ்துளை கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவு மிக மிக குறைந்து போன நேரத்தில் இந்த காவிரி கூட்டு குடிநீர் தான் வரபிரசாதமாக அமைந்தது.காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மேலூர் காந்திஜி பூங்கா ரோட்டில் தனி அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பணியில் இருக்கும் அதிகாரிகள் தினசரி குழாய்களில் உடைப்புகள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் அது நடைபெறுவது இல்லை. நாளிதழ்களில் செய்தி வெளியான பிறகே அந்த இடத்திற்கு சென்று அவற்றை சரி செய்கின்றனர்.

மேலூர் நான்கு வழிச்சாலையில் தும்பைப்பட்டி ஊராட்சியை சேர்ந்த தாமரைப்பட்டியின் அருகில் வால்வு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பொங்கி நீர் ஊற்றை போல் வீணாகி வருகிறது. இந்த தண்ணீர் அந்த பகுதியை நிறைத்து அருகில் உள்ள வயல் பகுதியில் வீணாக தேங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக தண்ணீர் இப்படி வீணாகி வருவதாக அப்பகுதியில் உள்ளவர்கள் கூறினர். குடிநீர் பிரச்சனை தமிழகமெங்கும் தலைவிரித்தாடும் நிலையில், இப்படி தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது. இதனை தடுக்க அதிகாரிகள் உடனடியாக முன் வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.