வரும் 5ந்தேதி ‘காவிரி ஒழுங்காற்றுகுழு கூட்டம்’: காவிரி ஆணைய தலைவர் அறிவிப்பு

டில்லி :

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று டில்லியில் நடைபெற்றுள்ள நிலையில், வரும் 5ந்தேதி காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டில்லியில்  நடைபெறும் என காவிரி ஆணைய தலைவர் மசூத் தெரிவித்துள்ளார்.

இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் முடிவடைந்ததும் செய்தியாளர்களை சந்தித்த ஆணையத்தின் தலைவர், மசூத் உசேன், இன்றைய  ஆலோசனையின்போது  ஆணையத்தின் பணிகள், நீர் இருப்பு, திறப்பு அளவு தகவல்கள் குறித்து ஆலோசித்ததாக தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் (நடுவில் இருப்பவர்)

நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதில் மகிழ்ச்சி என்று தெரிவித்த அவர், ஆணையத்தின் பணிகள், தேவையான கட்டுமானம், நீர் இருப்பு, திறப்பு அளவு தகவல்கள் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்றும் நடுவர் மன்ற தீர்ப்பின் படி ஜூன் மாதத்திற்கு திறக்கப்பட்ட நீர், ஜூலை மாதத்துக்கு திறக்க வேண்டிய நீர் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் ஆலோசித்தோம் என்றும் மசூத் உசேன் கூறினார்.

மேலும், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்டியது வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்று தெரிவித்த அவர், ஜூன் மாதத்தில் கூடுதலாக தந்த நீர் போக மீதியை தமிழகத்துக்கு கர்நாடக திறக்க வேண்டும் என்றும் காவிரி ஆணைய உத்தரவுகளை கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் மதிக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஜூலை 5ம் தேதி டில்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று கூட்டம் நடைபெறும் என்று காவிரி ஆணையத் தலைவர் மசூத் உசேன் கூறினார்.