சென்னை:

காவிரி நீர் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் வருகிற 31ம் தேதி திருச்சியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

காவிரி நதி நீர் விவகாரத்தில் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழுவை மத்திய அரசு கடந்த ஆண்டு அமைத்தது. அதைத்தொடர்ந்து காவிரி ஒழுக்காற்றுக்குழு  கூட்டம்  நடைபெற்று வருகிறது. இதுவரை 10க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடைபெற்றுள்ளது.

தற்போது காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரள மாநிலங்கள் சார்பாக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தமிழகத்தின் சார்பாக திருச்சி மண்டல பொதுப்பணித்துறை கண்கானிப்பு பொறியாளர் அன்பரசன், காவேரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர் பட்டாபிராமன் மற்றும் உதவி செயற்பொறியாளர் மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பின்போது மாநிலங்களில் உள்ள அணை பராமரிப்பு, அதற்கான நடைமுறைகள், அணை பாதுகாப்பு ஆகியவை குறித்த அனைத்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.  இதையடுத்து அடுத்த கூட்டம் திருச்சியில் வரும் 31ம் தேதி நடைபெற உள்ளதாக ஒழுங்காற்று தலைவர் நவீன் குமார் தெரிவித்தார்.