சென்னை:

காவிரி விவகாரத்தில் மே 3ந்தேதி நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புவதாகவும், அதன் காரணமாக சந்திரமவுலி படத்தின் வெளியீட்டை மே 3ந்தேதிக்கு பிறகு தள்ளி வைக்கும்படி தயாரிப்பாளர் தனஞ்செயனுக்கு  உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.

காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி  6 வாரக்காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், உச்சநீதி மன்ற உத்தரவை செயல்படுத்தாத, மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்துள்ளது.

அதேவேளையில், மத்திய அரசு சார்பில் ‘ஸ்கீம்’ என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதி மன்றம், மே3ந்தேதிக்குள், காவிரி விவகாரம் குறித்து மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியது.

இந்நிலையில், நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், பிரபல படத்தயாரிப்பாளரான தனஞ்செயனுக்கு, மிஸ்டர் சந்திரமவுலி படத்தை மே 3ந்தேதிக்கு பிறகு வெளியிடுங்கள் என்று கூறி உள்ளார்.

மேலும், மே 3ந்தேதி  காவிரி விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாகவும், ஆகவே படம் வெளியாவதை தள்ளி வைக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளார்.