தந்தை மகன் உயிரிழந்த சம்பவம்: சாத்தான்குளத்தில் சிபிசிஐடி, தடயவியல் காவல்துறையினர் விசாரணை

சாத்தான்குளம்:

விசாரணைக்கு அழைத்துச்சென்ற தந்தை மகன் உயிரிழந்த சம்பவம்நாடு முழுவதும் அதிர்வலைக ளை ஏற்படுத்தி உள்ளது, உயர்நீதிமன்றம் மதுரை உத்தரவின் பேரில,  சாத்தான்குளத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ், பென்னிக்ஸ், ஊரடங்கு நேரத்தை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி, காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று, கடுமையாக தாக்கப்பட்டதையடுத்து, அவர்கள் இருவரும் மரணம் அடைந்தனர். இந்த விவகாரம் உலகம் முழுவதும் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது,

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக , உயர்நீதி மன்றம் மதுரைகிளை தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

நேற்றைய விசாரணையைத் தொடர்ந்து, சிபிஐ பொறுப்பேற்கும் வரை, இந்த வழக்கை தற்காலிக மாக சிபிசிஐடி மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து நெல்லை மாவட்ட சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமார் தலைமையில் மூன்று குழுக்கள் சாத்தான்குளம் பகுதிகளில் உள்ள ஜெயராஜ், பென்னிக்ஸ் வீடு மற்றும் காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்கள்.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில்  சிபிசிஐடி டி.எஸ்.பி அனில்குமார் விசாரணை மேற்கொண்டார்.  பின்னர் இறந்த ஜெயராஜ் கடை அமைந்துள்ள பகுதியிலும் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கடைத்தெருவில் உள்ள வியாபாரிகள் தாங்களாக முன்வந்து நடந்த சம்பவத்தை விவரித்தனர்.
அதேசமயம் ,  தடயவியல் நிபுணர்கள் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இது ஒரு புறமிருக்க அதன்பின்னர் ஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப்பட்ட இடத்தில் காவல் ஆய்வாளர் உலக ராணி ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் ஜெயராஜ், பென்னிக்ஸ் இல்லத்தில் விசாரணை நடத்தினார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர் பிறைசந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
முக்கிய ஆதாரமாக அமைந்துள்ள சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பகுதிகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். காவல்நிலையத்தில் அழிக்கப்பட்ட சிசிடிவி பதிவுகளை மீட்கும் பணியில் வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விசாரணை நடைபெறும் இடங்கள் அனைத்தும் சிபிசிஐடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. சாத்தான்குளம் காவல்நிலைய நுழைவு வாயில் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,  தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி முரளி ஜெயின் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்ப உறுப்பினர்களிடம் ஆறுதல் கூறி இந்த சம்பவம் தொடர்பாக என்ன நடந்தது என கேட்டறிகின்றார். மேலும் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என உறுதி அளித்து ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில், மாஜிஸ்திரேட் விசாரணையும் தொடர்ந்து வருகிறது.  திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் சாட்சிகளிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார்.

காவல் நிலையத்தில் சிபிசிஐடி விசாரணை நடைபெறுவதால், மீதமுள்ள சாட்சிகளிடம் விருந்தினர் மாளிகையிலேயே விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார்.