குட்கா வழக்கு: கைது செய்யப்பட்ட 5 பேரையும் காவலில் எடுக்க சிபிஐ உயர்நீதி மன்றத்தில் மனு!
சென்னை:
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் காவலில் வைத்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்காவை திருட்டுத்தனமாக விற்பனை செய்ய அனுமதி அளித்த விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பிவி ரமணா மற்றும் முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், டிஜிபி ராஜேந்திரன் வீடுகள் உள்பட 40 இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்தி ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு தொடர்பாக குட்கா குடோன் அதிபர் மாதவராவ், அவரது தொழில் கூட்டாளிகளான பங் குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ் ஆகியோரும், அதிகாரிகளான செந்தில் முருகன், பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் 5 பேரையும் காவலில் எடுக்க சி.பி.ஐ. திட்ட மிட்டுள்ளது. இதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று காலை சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனுமீதான விசாரணை பிற்பகலில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
போலீஸ் காவலில் இவர்களிடம் சிபிஐ நடத்தும் விசாரணையை தொடர்ந்து, குட்கா ஊழல் வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.