டில்லி சிறுவன் கொலை : பதினோராம் வகுப்பு மாணவர் கைது

டில்லி

டில்லியில் ஒரு பள்ளியில் கத்தியால் அறுத்து கொல்லப்பட்ட சிறுவன் வழக்கில் திருப்பம் நிகழ்ந்துள்ளது.

டில்லி அருகிலுள்ள குர்கானில் உள்ள ரியான் சர்வதேசப் பள்ளியில் ஒரு மாணவன் கழுத்து அறுபட்டு பிணமாக கிடந்தார்.  இரண்டாம் வகுப்பில் பயிலும் 7 வயது மாணவனான பிரத்யுமன் என்னும் அந்தச் சிறுவன் பள்ளிப் பேருந்து நடத்துனரால் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தி பின் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.   இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சி பி ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

சி பி ஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அன்று 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவரைக் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.  விசாரணையில் கொலை செய்ததை மாணவர் ஒப்புக் கொண்டதாகவும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி  சில தினங்களுக்கு முன்பு அவர் வாங்கியதாக கூறியதாகவும் சி பி ஐ தரப்பு தெரிவித்தது.   அந்த 11ஆம் வகுப்பு மாணவர் படிப்பில் பின் தங்கி இருந்ததால் தேர்வுகளை ஒத்தி வைக்கவும், நடக்கவிருந்த பெற்றோர் ஆசிரியர் சந்திப்பை நிறுத்தவும் இந்தக் கொலையை செய்துள்ளார் என சி பி ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், “இந்த மாணவர் இந்த நிகழ்வுக்குப் பின் சாதரணமாகவே இருந்து வந்துள்ளார்.  வீட்டிலும், பள்ளியிலும் அவர் நடவடிக்கைகளில் எவ்வித மாறுதலும் கண்டுபிடிக்க முடியாத அளவு கவனாமாக உள்ளார்.  கொலை நடந்த அன்று அவர் தான் பிரத்யுமன் கழுத்தறுபட்டு கழிவறையில் காணப்பட்டதாக தோட்டக்காரரிடம் தகவல் கூறி உள்ளார்.  அவர் அன்று அணிந்திருந்த உடைகளைக் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம்” என சி பி ஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.