Random image

மருந்துகள் வழங்கிய நிலுவை ரசீதுகளுக்கு ஒப்புதல் அளிக்க ரூ.10 லட்சம் லஞ்சம்: ‘ஆயுஷ்’ அதிகாரி கைது

டில்லி:

நிலுவையில் உள்ள ரசீதுகளுக்கு ஒப்புதல் அளிக்க 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக  மத்திய அரசு அதிகாரியை சிபிஐ போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தேசிய ஆயுஷ் மருத்துவ திட்டம் (NAM) மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. அனைவருக்கும் மலிவான விலையில் ஆயுஷ் மருத்துவ சேவைகள் கிடைக்கப்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ஆயுஷ் அதிகாரி காத்ரி

இதில், சார்பு செயலாளராக பணியாற்றி வருபவர் ஆர்.கே.காத்ரி. ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய மருந்து மற்றும் மருந்து பொருட்கள் கழகத்தின் நிர்வாக இயக்குனராகவும் இவர் இருந்து வருகிறார்.

ஆயுஷ் நிறுவனத்தில்  மருந்து பொருட்கள் விற்பனை செய்து வந்த வகையில், ஏஜென்ட் ஒருவருக்கு வர வேண்டிய தொகையை கேட்டு அவர் மருந்து சப்ளை செய்ததற்கான ரசிதுகளை சம்ர்ப்பித்து கோரி உள்ளார்.

அப்போது அவரிடம் காத்ரி, ரசீதுகளுக்கு ஒப்புதல் அளிக்க தனக்கு 10 லட்சம் ரூபாய் தரவேண்டும் என கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ஏஜென்ட் இதுகுறித்து சிபிஐயிடம் புகார் அளித்தார். அதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் ஆலோசனையின்பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் அடங்கிய பணத்தை ஆர்.கே.காத்ரியிடம் அந்த ஏஜென்ட் கொடுத்து, தனது நிலுவை தொகையை பாஸ் செய்யும்படி கோரினார்.

பணத்தை வாங்கிக்கொண்ட காத்திரி, உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறிக்கொண்டிருந்தபோது, ஆர்.கே.காத்ரியை சுற்றி வளைத்த  சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும், அவரது வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தி விசாரித்து வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.