டில்லி:

என்எக்ஸ் மீடியா வழக்கில்  கார்த்தி சிதம்பரத்தின் போலீஸ் 3 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், மேலும் 15 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்ற சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தின், 3வது முறையாக நீட்டிக்கப்பட்ட 3 நாள் போலீஸ் காவல் முடிவடைந்துள்ள நிலையில், டில்லி  பாட்டியாலாவில் உள்ள சிபிஐ  கோர்ட்டில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டிய  அதிகாரிகள், மேலும் 15 நாட்கள் காவல் நீட்டிப்பு வழங்கக்கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஐஎன்எக்எஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த மாதம் 28ந்தேதி சென்னை ஏர்போர்ட்டில், சிபிஐ அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை  போலீஸ் காவலில் எடுக்க சிபிஐ தாக்கல் செய்த மனுவின்மீது, முதல் கட்டமாக 6 நாட்கள் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், கடந்த 6ந்தேதி ஆஜர் படுத்தப்பட்டபோது மேலும் 3 நாட்கள் போலீஸ் காவலுக்கு கோர்ட்டு அனுமதி அளித்திருந்தது.

அதைத்தொடர்ந்து கடந்த 9ந்தேதி பாட்டியாலா சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கார்த்தி சிதம்பரத்திடம் மேலும் விசாரணை நடத்த   6 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதிக்க கோரி சிபிஐ அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர்.

அதையடுத்து 3 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்து சிபிஐ கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில், அவரது 12 நாட்கள் போலீஸ் காவல் முடிவடைந்து இன்று சிபிஐ கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் விசாணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருவதால், மேலும் 15 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் தனது ஜாமீன் மனுவை விரைவில் விசாரிக்க கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐ கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.