பாஜகவின் கொள்கை நிறுவனமான சிபிஐ : மம்தா பானர்ஜி கடும் தாக்கு

டில்லி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சிபிஐ பாஜகவின் கொள்கை நிறுவனமாகி விட்டதாக குற்றம் சாட்டி உள்ளார்.

இந்தியாவின் புலனாய்வு நிறுவனமான சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோருக்கிடையே க்டும் மோதல் ஏற்பட்டது. தனது விசாரணையில் அலோக் வர்மா தலையிடுவதாக ராகேஷ் அஸ்தானா புகார் அளித்தார். அந்த சர்ச்சை ஓய்வதற்குள் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக சிபிஐ வழக்கு பதிந்துள்ளது.

மத்திய அரசு இருவரையும் இன்று அதிகாலை முதல் விடுப்பில் செல்ல உத்தரவிட்டது. அத்துடன் சிபிஐக்கு புதிய இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். ராகேஷ் அஸ்தானா வழக்கை விசாரித்த குழுவினர் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நாடெங்கும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இது குறித்து, “சிபிஐ தற்போது பாஜகவின் கொள்கை நிறுவனமாக மாறி உள்ளது. சிபிஐ இனிமேல் பிபிஐ (பாஜக விளம்பர நிறுவனம்) என அழைக்கப்பட வேண்டும்” என டிவிட்டரில் பதிந்துள்ளார்.