3,600 கோடி வங்கிக்கடன் மோசடி செய்த மேலும் ஒரு குஜராத் நிறுவனம்: சிபிஐ வழக்குப்பதிவு, லுக் அவுட் நோட்டீஸ் வெளியீடு

டெல்லி: 3,600 கோடி ரூபாய் மோசடியில், குஜராத்தை சேர்ந்த பிரபல நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

மும்பையில் ப்ரோஸ்ட் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குநர்களாக இருப்பவர்கள் உதய் ஜெயந்த் தேசாய், சுஜய் உதய் தேசாய். இவர்களது மீதும் 12 பேர் மீதும் கான்பூரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா சார்பில் ஒரு புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் சிபிஐ குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடி, கிரிமனல் சதி மற்றும் மோசடி ஆகிய பிரிவுகளின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எந்தவித பணவர்த்தனை இன்றி, வணிக வர்த்தகம் என்ற போர்வையில் நிறுவனத்தின் இயக்குநர்கள் மோசடி செய்ததாக அந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது. மொத்தம் 14 வங்கிகளில் இதுபோன்ற மோசடியை அவர்கள் அரங்கேற்றி இருக்கின்றனர்.

அதாவது, கடன் வாங்கும் நிறுவனம், அதன் இயக்குநர்கள், உத்தரவாத தாரர்கள், போலியான பத்திரங்களை உண்மையான ஆவணங்களாக பயன்படுத்தி மோசடி செய்து, 3592.48 கோடிக்கு கடன் வாங்கி ஏமாற்றி இருக்கின்றனர்.

இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் தப்பித்து வெளிநாடுகளுக்கு சென்றுவிடாமல் இருக்க, அவர்கள் மீது லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டு உள்ளது.