சிபிஐ இயக்குனர் மீதான புகார் குறித்து சிவிசி விசாரணை தொடக்கம்

டில்லி:

சிபிஐ இயக்குனர் மீதான புகார் குறித்து சிவிசி விசாணையை தொடங்கியுள்ளது.

சிபிஐ இயக்குனராக இருப்பவர் அலோக் வர்மா. இவர் மீது அவருக்கு அடுத்த இடத்தில் பணியாற்றும் ராகேஷ் அஸ்தனா என்பவர் புகார் அளித்திருந்தார். தனது சிறப்பு புலன் விசாரணையில் அவர் தலையீடு செய்வதாக தெரிவித்திருந்தார்.

அஸ்தனா சிறப்பு இயக்குனர் என்ற பதவியுடன் கிங் பிஷர், அகஸ்தா வெஸ்ட்லேண்ட் போன்ற வழக்குகளை விசாரணை மேற்கொண்டு வருகிறார். வர்மா தலையீடு குறித்து அஸ்தனா மத்திய அரசுக்கு புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது மத்திய அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இந்த புகார் குறித்து விசாரிக்க மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் (சிவிசி) உத்தரவிடப்பட்டுள்ளது. ஆணையம் தனது முதல்கட்ட விசாரணையை தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புகார் மீதான உண்மை தன்மை குறித்த விசாரணை நடந்து வருகிறது. ஊழல் தடுப்பு சட்டத்தை அமல் செய்யும் தன்னாட்சி அமைப்பாக சிவிசி செயல்படுகிறது. உயர் பதவியில் உள்ள நபர்கள் குறித்து நடைபெறும் விசாரணைக்கு சிவிசி தலைவர் தான் பொறுப்பாளராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.