Random image

விஜய் மல்லையா தப்பிய விவகாரம்…..ராகுல் குற்றச்சாட்டுக்கு சிபிஐ மறுப்பு

டில்லி:
விஜய் மல்லையா தப்பிச் சென்ற விவகாரத்தில் ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு சிபிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.

ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பி சென்றுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் இன்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

அதில்,‘‘சி.பி.ஐ.யின் இணை இயக்குனரான ஏ.கே. சர்மா, விஜய் மல்லையாவுக்கு விதிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை பலவீனமடைய செய்துள்ளார். இது மல்லையா தப்பி செல்ல அனுமதித்து விட்டது.

பஞ்சாப் நேசனல் வங்கி பணமோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினரான மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல வகுத்த திட்டத்திற்கும் இந்த அதிகாரியே பொறுப்பு ஆவார். சி.பி.ஐ.யின் விசாரணை அதிர்ச்சி தருகிறது’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்து சி.பி.ஐ. அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘ சி.பி.ஐ.யின் மூத்த அதிகாரிக்கு எதிராக சில தனி நபர்கள் அடிப்படையற்ற சில குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர். விஜய் மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை திருத்தும் முடிவு சி.பி.ஐ.யால் எடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் மல்லையாவை கைது செய்வதற்கு போதிய அடிப்படை விசயங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது.

இந்த முடிவு முறையான அளவிலேயே எடுக்கப்பட்டது. குற்றச்சாட்டு கூறுவது போல் சி.பி.ஐ. அதிகாரியால் தனிப்பட்ட முறையில் எடுக்கப்படவில்லை. நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர் நாட்டை விட்டு தப்பி சென்ற ஒரு மாதத்திற்கு பின்பே அவர்களுக்கு எதிரான பஞ்சாப் நேசனல் வங்கியின் புகார் எங்களுக்கு கிடைக்கப்பெற்றது.

அதனால் அவர்கள் வெளிநாடு தப்பி சென்ற விவகாரத்தில் சி.பி.ஐ. அதிகாரி எவரும் ஈடுபட்டனரா? என்ற கேள்வியே எழுவதற்கு இடமில்லை. வங்கியின் புகார் கிடைத்தவுடன் உடனடியாக சி.பி.ஐ. நடவடிக்கை மேற்கொண்டது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.