சிபிஐ இயக்குனர் கட்டாய விடுப்பு: அலோக் வர்மா, சாந்திபூஷன் மனுக்கள் மீது இன்று விசாரணை

டில்லி:

சிபிஐ இயக்குனர்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் காரணமாக  கட்டாய விடுப்பு எடுத்து செல்ல மத்திய அரசு வற்புறுத்தியதை எதிர்த்து சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மத்திய அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. மேலும், சாந்திபூஷன் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணையும் இன்று நடைபெற இருக்கிறது.


சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா இடையே ஏற்பட்ட லஞ்ச குற்றச்சாட்டு காரணமாக, அவர்களை நீக்க மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

இதையடுத்து இணை இயக்குநர் எம். நாகேஸ்வர் ராவ் இடைக்கால இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அலோக் குமார் வர்மா, உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்தார். அதில், முக்கிய வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

சிபிஐ அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்து, ஒரே இரவில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமும், மத்திய அரசும் நடவடிக்கை மேற்கொண்டது சட்டவிரோதம்; இதுபோன்ற தலையீடுகள், சிபிஐ-யின் சுதந்திரத்தையும் தன்னாட்சியையும் சீர்குலைத்துவிடும் என்று மனுவில் அலோக் குமார் வர்மா கூறியுள்ளார்.

இந்த மனு மீது தலைமை நீதிபதி ரஞ்சய் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது.

அதுபோல, சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர் ராவை, நியமித்து  மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதை எதிர்த்தும், ராகேஸ் அஸ்தானா உள்பட சிபிஐ அதிகாரிகள் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்தும்படியும்  பிரபல வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மனுமீதான விசாரணையும் இன்று நடைபெற உள்ளது.