டில்லி

பிரதமர் மோடி தலைமையிலான சிபிஐ இயக்குனர் தேர்வுக் குழு அலோக் வர்மாவை பதவி நீக்கம் செய்துள்ளது.

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் செல்லும்படி உத்தரவிட்ட மத்திய அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் சிபிஐ இயக்குனர் தேர்வுக் குழுவுக்கு  ஒரு வாரம் கெடு அளித்தது. ஆயினும் சிபிஐ இயக்குனர் தேர்வுக்குழு உடனடியாக விசாரணையை நேற்று தொடர்ந்தது. இன்று இரண்டாம் நாளாக விசாரணை நடைபெற்றது.

இன்று நடந்த விசாரணை கூட்டத்தில் சிபி ஐ இயக்குனர் அலோக் வர்மாவை நீக்க குழு முடிவு செய்தது. இந்த குழுவில் உள்ள பாராளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏற்கனவே இது குறித்து அலோக் வர்மா தனது பதிலை பதிவு செய்ய வேண்டும் என கோரி இருந்தார். ஆனால் குழு அதை ஏற்கவில்லை.

இன்று நடந்த கூட்டத்தில் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா நீக்கப்படுவதாக பெரும்பான்மை முடிவின்படி தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் தலைவர் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அயினும் அவர் எதிர்ப்பையும் இந்த குழு ஏற்கவில்லை.

இது குறித்து காங்கிரஸ் தரப்பில் அந்த கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் “அலோக் வர்மா அவரது தரப்பு வாதங்களை தெரிவிக்க வாய்ப்பு அளிக்காமல் நீக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் பிரதமர் மோடி விசாரணைக்கு பயப்படுகிரார் என்பதை நிரூபித்துள்ளார். அது சிபிஐ இயக்குனராக இருந்தாலும், அல்லது கூட்டு பாராளுமன்ற குழுவாகினும் சரி.” என பதிவிட்டுள்ளது.