சேலம்: சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரண வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி கால்நடை பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதன் பின்னர், ரூ.1022 கோடி மதிப்பீட்டில் கால்நடை பூங்கா கட்டப்பட்டு வருகிறது.

இந்த கட்டுமான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப்பூங்கா இதுதான். நூலக கட்டடம், மாணவர் விடுதிக்கான கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன.  நாட்டின மாடுகள், நாய் இனங்கள் அழிந்து விடாமல் பாதுகாக்கப்படும்.

சாத்தான்குளம், தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம் குறித்து நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐ விசாரணை நடத்தப்படும். கொரோனாவிலிருந்து மக்களைக் காக்க அரசு இயந்திரம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று எப்படி பரவுகிறது என்று நிபுணர்களாலேயே கணிக்க முடியவில்லை. கொரோனாவிலிருந்து மக்களைக் காக்க நானும், துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் களத்தில் நிற்கிறோம். ஆனால் ஸ்டாலின் அரசியல் அறிக்கையை மட்டுமே வெளியிடுகிறார் என்றார்.