சிபிஐ தற்போதைய நிலை குறித்து முன்னாள் இயக்குனர் வருத்தம்

டில்லி
சிபிஐ அமைப்பில் தற்போது நடக்கும் நிகழ்வுகளால் முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன் வருத்தம் அடைந்துள்ளார்.

பல பிரபலங்கள் லஞ்ச வழக்கில் சிக்கிய போது அந்த வழக்கில் துப்பறிந்து உண்மையை வெளிக் கொணரும் கடமையை சிபிஐ செய்து வருகிறது. தற்போது சிபிஐ அமைப்பின் சிறப்பு இயக்குனர் மீது லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது. அத்துடன் சிபிஐ அதிகாரிகள் தங்களின் தலைமையகத்திலேயே சோதனை மேற்கொள்ளும் நிலைக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இந்த நிலை குறித்து நாட்டு மக்கள் பலரும் அதிர்ச்சியை தெரிவித்துள்ளனர். சமூக வலை தளங்களில் பலர் இந்த சம்பவங்கள் இந்திய உளவுத்துறைக்கு தலை குனிவை ஏற்படுத்துவதாகவும் கருத்து கூறி உள்ளனர். இதே போல் சிபிஐ முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

கார்த்திகேயன், “தற்போது நடக்கும் நிகழ்வுகள் மிகவும் துயரமானவை. சிபிஐ அமைப்புக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து சிபிஐ மீண்டு வந்து தனது நம்பிக்கையை திரும்பப் பெற நீண்ட காலம் ஆகும். மனிதர்கள் வரலாம், போகலாம் ஆனால் அமைப்பை கேவலம் செய்யும் நடவடிக்கைகள் கூடாது.” என தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்