டில்லி

ஹெலிகாப்டர் ஊழலில் தரகராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கிறிஸ்டியன் மைக்கேல் சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குனர் மீது புகார் தெரிவித்துள்ளார்.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்ய 12 ஹெலிகாப்டர்கள் வாங்க முந்தைய காங்கிரஸ் அரசு ஒப்பந்தம் இட்டது.  அப்போது இதற்காக இந்தியாவில் உள்ள சிலருக்கு 10 % கமிஷன் அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ரூ. 3600 கோடிமதிப்புள்ள இந்த ஒப்பந்தம் 2014 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

இந்த பேரத்தில் இடைத் தரகராக கிறிஸ்டியன் மைக்கேல் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.   கடந்த ஆண்டு துபாயில் கைது செய்யப்பட்ட மைக்கேல் துபாய் நீதிமன்றத்தால் நாடு கடத்தப்பட்டு இந்தியா அனுப்பி வைக்கப்பட்டார்.   அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப் படுத்துவதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் நேற்று முன் தினம் மைக்கேல் டில்லி கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார்.  அப்போது அவர், “நான் துபாயில் இருந்த போது என்னை அப்போதைய சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா சந்தித்தார்.  அவர் என்னை சிபிஐ சொன்னபடி சொல்ல வேண்டும் எனவும் அப்படி இல்லை எனில் எனது சிறை வாழ்க்கை நரகமாக இருக்கும் எனவும் என்னை மிரட்டினார்.

தற்போது அதுதான் நடந்து வருகிறது.   என்னை தனிமை சிறையில் அடைத்து வைத்து மனரீதியாக கொடுமை செய்து வருகின்றனர்.  எனது பக்கத்து சிறை அறையில் சோட்டா ராஜன் என்னும் கேங்ஸ்டர் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.   ஏராளமானவர்களை கொன்றவர்களுடன் என்னை அடைத்து வைக்கும் அளவுக்கு நான் என்ன குற்றம் செய்தேன் என்பது எனக்கு தெரியவில்லை” என தெரிவித்துள்ளார்.

அதை ஒட்டி மைக்கேலிடம் அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணை நடத்தும் போது ஒரு சிறை அதிகாரி உடன் இருக்க வேண்டும் என நீதிமன்ரம் உத்தரவிட்டுள்ளது.   அத்துடன் தினமும் காலையிலும் மாலையிலும் அரை மணி நேரம் மைக்கேலின் வழக்கறிஞர் உடன் இருக்கவும் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.