டில்லி

ருத்துவத்துறையில் பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடந்த தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றின் மேல் சி பி ஐ வழக்கு பதிந்துள்ளது.

நாடெங்கும் உள்ள 35117 மருத்துவ பட்டமேற்படிப்புக்கான மாணவரி சேர்க்கைக்காக 2016ஆம் ஆண்டு நவம்பரில் நீட் தேர்வு நடத்தப்பட்டது.  அதில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்துக் கொண்டனர்.  இது ஆன் லைன் தேர்வு ஆகும்.  இந்த தேர்வை நடத்திய ப்ரோமெட்ரிக் டெஸ்டிங் பிரைவேட் லிமிடெட் என்னும் கம்ப்யூட்டர் நிறுவனம் இந்த தேர்வில் முறைகேடுகள் நிகழ்த்தியதாக புகார்கள் எழுந்தன.  இதை விசாரித்த சி பி ஐ, தற்போது இந்த நிறுவனத்தின் மேல் வழக்கு பதிந்துள்ளது.

இந்த முறைகேடு பற்றிக் கூறப்படுவதாவது.

தேர்வு மையங்களில் இருந்த அனைத்து கம்ப்யூட்டர்களும், ப்ரோமெட்ரிக் நிறுவனத்தால் கையாளப்பட்டது.  ஒரு சில கம்ப்யூட்டர்களில் மட்டும் அவற்றை வெளியில் உள்ளவர்களும் உபயோகிக்கும் வகையில் ஒரு மென்பொருள் நிறுவப்பட்டது.  அந்தக் கம்ப்யூட்டர்கள் குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு தேர்ந்தெடுத்து தரப்பட்டது.

அந்த மாணவர்களின் தேர்வை மட்டும் வெளியே உள்ளவர்களால் பதிலளிக்க முடியுமாறு அந்த மென்பொருள் மூலம் செயல்படுத்தப்பட்டது.  இதற்காக மாணவர்களிடம் இருந்து சுமார் ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.3லட்சம் வரை வாங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மேல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி இந்த தேர்வு நடத்தும் பணியை எடுத்த ப்ரோமெட்ரிக் தனது பணியை தன் கீழ் உள்ள சப் காண்டிராக்டர்களுக்கும், அவர்களில் சிலர் தங்கள் கீழ் உள்ள நிறுவனங்களுக்கும் அளித்துள்ளனர்.  இதன் மூலம் இந்த வினாத்தாட்கள் ரகசியமும், பாதுகாப்பும் கேள்விக்குறி ஆனது. சண்டிகரில் உள்ள ஒரு மையத்தில் வினாக்கள் எழுதிய துண்டுச் சீட்டுக்களை கண்காளிப்பாளரே குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு விநியோகித்ததாகவும் புகார் எழுந்தது.

இது குறித்து முதலில் புகார் அளித்த டாக்டர் ஆனந்த் ராய் முந்தைய மத்தியப் பிரதேச வியாபம் ஊழலிலும் குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  ஆனந்த் ராய், “ப்ரோமெட்ரிக் ஒரு அமெரிக்க நிறுவனம். இந்த நிறுவனத்துக்கு டெண்டர் விடாமல் நேரடியாக தேர்வு நடத்தும் பணி அளிக்கப்பட்டுள்ளது.  அது மட்டுமின்றி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் தேர்வு பற்றிய டேட்டாகளை ஃஃபார்மேட் செய்ய நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இது இந்திய ஆதார சட்டத்துக்கு புறம்பானது.  இந்த டேட்டாக்கள் குறைந்தது ஐந்து வருடங்களாவது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே விதிமுறை.” எனக் கூறினார்.