திகார் : கைதிகளை தாக்கியதாக தமிழக காவல்துறையினர் மீது சிபிஐ வழக்கு

டில்லி

டில்லியில் உள்ள திகார் சிறைச்சாலையில் பாதுகாப்பு பணியில் இருந்த தமிழக காவல்துறையினர் கைதிகளை தாக்கியதாக சிபிஐ வழக்கு பதிந்துள்ளது.

நாட்டின் உயர்ந்த பட்ச பாதுகாப்புள்ள சிறைச்சாலை என புகழப்படும் திகார் சிறையில் பிரபல குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் உயர் பாதுகாப்பு அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையின் காவலர்களில் தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு காவலர்கள் 80% பேர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 21 ஆம் தேதி அன்று இந்த உயர் பாதுகாப்பு அறைகளில் உள்ள 18 கைதிகளிடம் மொபைல் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளதாக தகவல்கள் வந்தன. அதனால் தமிழக சிறப்பு காவல் பிரிவு உதவி ஆய்வாளர் முத்துப் பாண்டி மற்றும் 52 காவலர்கள் அந்த அறைகளில் சோதனை நடத்தினார்கள்.

அந்த சமயத்தில் காவல்துறையினருக்கும் கைதிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் கலவரமாக மாறியது. அப்போது காஷ்மீரை சேர்ந்த 18 உயர் பாதுகாப்பு கைதிகள் மீது தமிழக காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டது.

இந்த கலவரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் சிபிஐ இந்த கலவரத்தை தூண்டியவர்கள் குறித்து முதல்கட்ட விசாரணை நடத்தியது. அந்த விசாரணை அடிப்படையில் காஷ்மீரை சேர்ந்த 18 கைதிகளை தாக்கியதாக தமிழக சிறப்பு காவல் பிரிவு உதவி ஆய்வாள்ர் முத்துப் பாண்டி மற்றும் 52 பேர் மீது சிபிஐ வழக்கு பதிந்துள்ளது.