அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ ஊழல் வழக்கு பதிவு

டில்லி

ந்திய வரலாற்றில் முதல் முறையாக அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் என் சுக்லா மீது சிபிஐ ஊழல் வழக்கு பதிந்துள்ளது.

கடந்த 2017-18ஆம் ஆண்டில் லக்னோவில் உள்ள ஜி.சி.ஆர்.ஜி இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்தது. உச்சநீதிமன்ற உத்தரவு வெளியான சில நாட்களுக்குப் பிறகு, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் நீதிபதி எஸ்.என்.சுக்லா லஞ்சம் வாங்கிக்கொண்டு இந்த உத்தரவில் மாற்றங்களைச் செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த புகாரையடுத்து உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் அடங்கிய உள் விசாரணைக் குழு விசாரணை நடத்தியது. இந்த நீதிபதிகள் குழு, 2017ம் ஆண்டில் கொடுத்த அறிக்கையில், சுக்லா மீதான குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாகத் தெரிவித்தது.  கடந்த ஜூன் மாதம் இவரை நீக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருமாறு பிரதமர் மோடிக்கு அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடிதம் எழுதியிருந்தார்.

பணியில் உள்ள நீதிபதி மீது தலைமை நீதிபதியின் அனுமதியின்றி சிபிஐ வழக்குப் பதிவு செய்ய முடியாது என்பது சட்டம் ஆகும்.  ஆகவே உயர்நீதிமன்ற நீதிபதி சுக்லாவை விசாரிக்க அனுமதி கோரி தலைமை நீதிபதிக்கு சிபிஐ கடிதம் அனுப்பியது. சுக்லா மீது வழக்குப் பதிவு செய்ய சிபிஐக்கு முந்தைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அனுமதி அளித்தார்.

இந்த அனுமதியின் அடிப்படையில் நேற்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.என்.சுக்லா மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.   அவர் மீது கிரிமினல் சதி வேலைகளில் ஈடுபட்டது, பதவியைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

ஏற்கனவே முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வலியுறுத்திய போதிலும்  சுக்லா பதவி விலக மறுத்தார். ஆகவே 2018 ல் நீதித்துறை பணிகள் அவரிடமிருந்து பறிக்கப்பட்டு பெயருக்கு மட்டுமே அவர் நீதிபதியாக இருக்கிறார்.