அப்ரூவராக மாறியதால் மன்னிக்கப்படும் இந்திராணி முகர்ஜி ?: குற்றப்பத்திரிக்கை ஏற்படுத்தும் சர்ச்சை

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றவாளியாக குற்றப்பத்திரிக்கையில் இந்திராணி முகர்ஜியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவர் அரசு தரப்பு சாட்சியாக மாறியதால், மன்னிக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா இணை உரிமையாளரான இந்திராணி முகர்ஜி, சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராகவும், அரசு தரப்பு சாட்சியாகவும் மாற விரும்புவதாக டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்று அவரை அரசு தரப்பு சாட்சியாக மாற்ற கடந்த ஜூலை மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அப்போது இந்த வழக்கில் ஆதாரங்களை ஒருங்கிணைக்க, இந்திராணி முகர்ஜி உடனான உரையாடல் தங்களுக்கு உதவியுள்ளதாக சிபிஐ தரப்பு வாதிட்டிருந்தது.

2007 – 2008ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திடம், வெளிநாட்டில் இருந்து 305 கோடி ரூபாய் முதலீட்டை ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்காக பெற்றுத்தர கோரி அவர் சந்தித்ததாகவும், இதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டு, பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தனது மகளின் மரணம் தொடர்பான வழக்கில் பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் சிதம்பரத்திற்கு 5 பில்லியன் டாலர் வரை தான் அளித்ததாக இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ள நிலையில், சரியான தொகையை அறிந்துக்கொள்ள வெளிநாட்டு அரசுகளின் தகவலுக்காக காத்திருப்பதாக சிபிஐ அறிவித்திருந்தது.

இவ்வழக்கில் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ப.சிதம்பரத்தை இருவரும் சந்தித்ததும், பணம் உடனடியாக எவ்வித தாமதமும் இன்றி கிடைத்திட அவருக்கு தனிப்பட்ட முறையில் லஞ்சம் வழங்கியதும் உறுதி செய்யப்பட்டது. இந்திராணி முகர்ஜி உடனான சந்திப்பை சிதம்பரம் மறுத்ததோடு, அவர் அரசியல் உள்நோக்கம் காரணமாக இவ்வாறு பேச வைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்திருந்தார்.

இத்தகைய சூழலில் தான் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி இரவு, சுவர் ஏறி குதித்து ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. சிபிஐ அதிகாரிகளை தொடர்ந்து அமலாக்கத்துறையினரால் கடந்த புதன்கிழமை பண மோசடி வழக்கில் ப.சிதம்பரம் மீண்டும் கைது செய்யப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தது தொடர்பாக நீதிமன்றத்திற்கு வெளியே பேட்டி அளித்த இந்திராணி முகர்ஜி, “ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது நல்ல செய்தி” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில், குற்றவாளியாக இந்திராணி முகர்ஜி கருதப்பட்டாலும், அரசு தரப்பு சாட்சியாக அவர் மாறியதால், மன்னிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ தாக்கல் செய்துள்ள இந்த குற்றப்பத்திரிக்கை, தேசிய அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.