குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை: உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு

டில்லி:

குட்கா விவகாரத்தை சென்னை உயர்நீதி மன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட நிலையில்,  உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் குட்கா, பான் மசலா போன்ற புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி விற்பனை செய்ய லஞ்சம் பெற்று அனுமதி கொடுத்ததாக திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ரூ.40 கோடி அளவில் ஊழல் நடைபெற்றது தெரிய வந்தது.

இந்த முறைகேட்டு வழக்கில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஜார்ஜ் உள்பட பல அதிகாரிகள் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குட்கா ஊழல் தொடர்பான விசாரணை செய்து வந்த அதிகாரிகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வந்தனர். இந்நிலையில், குட்கா முறைகேடு வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

 

அதைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக  தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன,, உள்துறைச் செயலாளர் ஆகியோரை  டி.ஜி.பி ராஜேந்திரன்  தலைமை செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.

இந்த விவகாரத்தில் அமைச்சரையும், டிஜிபியையும் பதவி நீக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிககை விடுத்துள்ளன.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து,  தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் திமுக தரப்பை விசாரிக்க வேண்டும் என்றும், தங்களது கருத்து கேட்காமல் இந்த விவகாரத்தில் உச்சநீதி மன்றம் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என  கேவியட் மனு செய்துள்ளது.