சென்னை:

ருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது , அவர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இன்று தீரன் சின்னமலையின் 262ம் பிறந்தநாளை முன்னிட்டு  அவரது உருவசிலைக்கு ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,  நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் விசாரணைக்கு குழு அமைத்தது குழப்பமாக உள்ளது என்றும், இந்த பிரச்சினையை பல்கலைக்கழக துணைவேந்தர்தான் கையாள வேண்டும்… ஆனால் வேந்தர் ஐஏஎஸ் அதிகாரியை விசாரணை குழு தலைவராக நியமனம் செய்துள்ளார் என்றும் குற்றம் சாட்டினார்.

“பல்கலைக்கழக துணைவேந்தர் தான் மாணவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்; ஆனால் பல்கலைக்கழக  வேந்தராக இருக்கக்கூடிய  ஆளுநர் செய்கிறார். இது ஏன் என்று தெரியவில்லை. குழப்பமாக உள்ளது”

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும் என்றும் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையில் உள்ள தேவாங்கல் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, தனது  கல்லூரி மாணவிகளுக்கு அதிக மதிப்பெண், சொகுசு வாழ்க்கை என ஆசை காட்டி பாலியல் தொழிலுக்கு அழைக்கும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து  பெற்றோர்களும், பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, கல்வித்துறை அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் நிர்மலாதேவியை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.