2ஜி ஊழலில் சிக்கிய எஸ்ஆர் குழும அதிபர் வெளிநாடு செல்ல மோடி அரசு உதவி

டில்லி:

2ஜி ஊழல் வழக்கில் சிக்கி நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டு வரும் எஸ்ஆர் குழும அதிபர் ரவிகாந்த் ரூயி வெளிநாட்டு சென்று வர மோடி அரசு உதவியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் எழுந்த 2ஜி ஊழல் குறித்து பாஜக கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின் அந்த ஊழலில் சிக்கி சிபிஐ சிறப்பு நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டு வரும் எஸ்ஆர் குழும அதிபர் ரவிகாந்த் ரூயிக்கு பலவித உதவிகளை மோடி அரசு செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அவர் ரஷ்யா மற்றும் சுவிட்சர்லாந்து சென்று மத்திய வர்த்தகம் மற்றும் வெளி விவகாரத் துறை அமை ச்சகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக தடையில்லா கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் அவர் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது.

இந்த வகையில் அவர் 2015ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த இந்தியா&ரஷ்யா வருடாந்திர மாநாட்டில் பிரதமர் மோடியுடன் சென்று கலந்துகொண்ட இந்திய கார்பரேட் நிறுவனங்களின் சிஇஓ.க்களில் பயண பட்டியலில் ரவிகாந்தும் இடம்பெற்றார்.

இதற்கு அடுத்தபடியாக சுவிட்சர்லாந்தில் நடந்த 13 பில்லியன் டாலர் மதிப்பிலான ரோஸ்நெப்ட்&எஸ்ஆர் ஆயில் கையகப்படுத்தும் ஒப்பந்தத்திற்காக ரவிகாந்த் ரூயி தனது நிறுவன அதிகாரிகளுடன் சென்று வந்தார். இதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கும் வகையில் மோடி அரசின் தடையில்லா சான்று கொடுக்கப்பட்டிரு க்கும் தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

2008ம் ஆண்டு நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு எதிரான சதி செயலில் ஈடுபட்டதாக ரவிகாந்த் ரூயியா, கிரான் கெய்தான் உள்ளிட்டோர் மீது சிபிஐ 2011ம் ஆண்டில் குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டை எஸ்ஆர் குழுமம் மறுத்தது. குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் ரவிகாந்துக்கு ஜாமின் வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதோடு பாஸ்போர்ட்டை சரண்டர் செய்ய உத்தரவிட்டு அவர் வெளிநாடு செல்ல முடியாத நிலையை நீதிமன்றம் ஏற்படுத்தியது. இதன் காரணமாக தான் ரவிகாந்த் நீதிமன்ற அனுமதி பெற்று ரஷ்யா, சுவிட்சர்லாந்து சென்று வந்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 21ம் தேதி அறிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.