பாபர் மசூதி இடிப்பு வழக்கு : காவல்துறை பாதுகாப்பைக் கோரும் சி பி ஐ நீதிபதி

டில்லி

பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரித்து வரும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ் கே யாதவ் தனக்கு காவல்துறை பாதுகாப்பு தேவை என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தி  நகரில் இருந்த பாபர் மசூதி ராமர் பிறந்த இடத்தில் இருந்த கோவிலை இடித்துக் கட்டப்பட்டதாகப் போராட்டங்கள் நடந்தன.   கடந்த 1992 ஆம் வருடம் டிசம்பர் மாதம் அந்த மசூதி இந்து அமைப்பினரால் இடித்து  தரைமட்டம் ஆக்கப்பட்டு அங்கு ராமர் சிலை வைக்கப்பட்டது.    அதையொட்டி தொடரப்பட்ட  வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வந்தன.   அவற்றில் ஒரு வழக்கு ரே பரேலியிலும் மற்றொன்று லக்னோவிலும் உள்ள நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வந்தன.

ரேபரேலியில் உள்ள வழக்கு அத்வானி,முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பாஜக மற்றும் இந்துத்துவா தலைவர்கள் மீது பகை உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பேசி மசூதி இடிப்புக்கு ஆதரவு அளித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்டது.    லக்னோவில் பாபர் சூடியை இடித்த கரசேவகர்கள் மற்றும் அவர்கள் வன்முறைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு ஆகும்  இந்த இரு வழக்குகளையும் ஒரே வழக்காக இணைத்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தினசரி அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளை நெருங்க உள்ளதால் விரைவில் முடிக்க நீதிமன்றம் நீதிபதிகள் இடமாற்றம் மற்றும் வழக்கு வாய்தா ஆகியவற்றுக்குத் தடை விதித்தது.   அதே நேரத்தில் நீதிபதிகள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க அனுமதி அளித்தது.  இந்த வழக்கு இன்பமிரு வாரங்களில் முடிய உள்ள நேரத்தில் கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி எஸ் கே யாதவ் இந்த வழக்கு விசாரணையை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கக் கோரிக்கை விடுத்தார்.  இது குறித்து உ பி மாநில அரசுக்குக் கருத்து அளிக்குமாறு உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் நேற்று நீதிபதி எஸ்கே யாதவ் உச்சநீதிமன்றத்துக்கு மற்றொரு கோரிக்கை விடுத்துள்ளார்.   தனக்கு காவல்துறை பாதுகாப்பு தேவை என அவர் அளித்த  கோரிக்கையை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு  நீதிபதியின் இந்த கோரிக்கை சரியானது எனவும் இது குறித்து உத்திரப் பிரதேச அரசு இன்னும் இரு வாரத்துக்குள் தனது பதிலைத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.