அகமதாபாத்: இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளான டி.ஜி.வன்சாரா மற்றும் என்.கே.ஆமின் ஆகியோரை, கடந்த 2004ம் ஆண்டு விசாரிக்க, அப்போதைய குஜராத் அரசு எங்களை அனுமதிக்கவில்லை என்று சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது சிபிஐ அமைப்பு.

குஜராத் கலவரங்கள் மற்றும் போலி என்கவுண்டர் தொடர்பான விஷயங்களில், சிபிஐ அமைப்பால் பொதுத்தளத்தில் வெளியிடப்படும் முதல் விஷயம் இதுதான் என்பது கவனிக்கத்தக்கது.

இதனையடுத்து, இந்த விவகாரம் நீதிமன்றத்தால் வரும் மார்ச் 26ம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சிபிஐ அமைப்பின் வழக்கறிஞர் ஆர்.சி.கொடேகர் கூறியுள்ளதாவது, “நாங்கள் கூறுவதைக் கூறிவிட்டோம். இனி, இதுதொடர்பாக முடிவெடுக்க வேண்டியது நீதிமன்றம்தான்.

அரசினுடைய முடிவுடன் நீதிமன்றம் உடன்படுகிறதா? அல்லது உடன்படாமல் போகிறதா? அல்லது இந்த விஷயம் தொடர்பாக எங்களை அறிக்கை சமர்ப்பிக்க கோருமா? என்பது இனிமேல்தான் தெரியவரும்” என்றார் அவர்.

– மதுரை மாயாண்டி