டில்லி: கார்த்தி சிதம்பரத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த டில்லி நீதிமன்றத்தில் அனுமதி கோர சிபிஐ திட்டமிட்டுள்ளது.

ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது அன்னிய முதலீடுக்கான தடையில்லா சான்றிதழ் அளிக்க, ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்திடம் ரூ10 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் கடந்த ஒன்றாம் தேதி லண்டனில் இருந்து சென்னை வந்தபோது, விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவர் டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ கோரியது.

ஆனால் 6 நாட்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு நடந்த மும்பைக்கு கடந்த நான்காம் தேதி சிபிஐ அதிகாரிகள் கார்த்தியை அழைத்து சென்றனர்.

இந்திராணி முகர்ஜிக்கும் கார்த்திக்கும் இடையேயான பண பரிவர்த்தனை உள்ளிட்டவை கூடுதல் தகவல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இந்திராணி முகர்ஜி அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு கார்த்தியை அழைத்து சென்று சிபிஐ  அதிகாரிகள் விசாரித்தனர்.

இந்த நிலையில் நேற்று கார்த்திக்கின் காவல் முடிவடைந்த நிலையில் டில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று மேலும் 3 நாட்களுக்கு சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் போலீஸ் காவல் இன்னும் ஒரு நாளில் முடிவடைய இருக்கிறது. மறுபடி காவலை நீட்டித்து கேட்க வாய்ப்புகள் இல்லை என்று சிபிஐ கருதுகிறது.

தவிர கார்த்தி, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆகவே கார்த்திக்கிடம்  உண்மை கண்டறியும் சோதனை (narco analysis test)நடத்த டெல்லி நீதிமன்றத்தில் அனுமதி கேட்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரம், இந்த சோதனை யாருக்கு கண்டறியப்படுகிறோ அவர் இதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்பது விதி.