பிரிட்டனில் உள்ள நிரவ் மோடியை கைது செய்ய சிபிஐ நோட்டீஸ்

டில்லி:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வரும் அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

தலைமறைவாக இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தாரை கைது செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமினில் விட முடியாத கைது உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனில் உள்ள தனது நகைக்கடையின் மாடியில் உள்ள வீட்டில் குடியிருந்த நிரவ் மோடி, அங்கிருந்து பெல்ஜியம் நாட்டுக்கு தப்பியோடி அந்நாட்டின் குடியுரிமை பெற முயற்சித்து வருவதாக தகவல் வெளியானது. இன்டர்போல் சார்பில் நிரவ் மோடிக்கு எதிராக சிகப்பு நோட்டீஸ் விடப்பட்டது.

நிரவ்மோடி இன்னும் பிரிட்டன் நாட்டு எல்லைக்குள் இருப்பதாக அந்நாட்டின் சார்பில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. பிரிட்டனில் இருக்கும் அவரை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்னும் நோட்டீசை சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்தனர். வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமாக இந்த நோட்டீஸ் விரைவில் பிரிட்டன் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may have missed