ராகேஷ் ஆஸ்தானா வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி அந்தமானுக்கு இடமாற்றம்

டில்லி

சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் ஆஸ்தானா லஞ்ச வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி  அந்தமானுக்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மாமிச வியாபாரி மொயின் குரேஷியின் வழக்கில் இருந்து தொழிலதிபர் சதிஷ் பாபுவை விடுவிக்க சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் ஆஸ்தானா லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு பதியப்பட்டது. அதை ஒட்டி அவருடைய அலுவலகமான சிபிஐ தலைமையகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை இட்டனர். ஏற்கனவே சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் ராகேஷ் ஆஸ்தானவுக்கு இடையே பனிப்போர் நிலவி வந்தது.

நேற்று இருவரையும் அழைத்து பிரதமர் விசாரணை நடத்தினார். சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் லஞ்சக் குற்றம் சாட்டப்பட்ட இணை இயக்குனர் ராகேஷ் ஆஸ்தானா ஆகிய இருவரும் இன்று காலை 2 மணியில் இருந்து விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு அலோக் வர்மா பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக இணை இயக்குனர் நாகேஸ்வர ராவ் சிபிஐ இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.

ராகேஷ் ஆஸ்தானாவின் வழக்கை சிபிஐ துணை சூப்பிரண்ட் ஏ கே பாசி யின் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது. தற்போது அவர் அந்தமான் தலைநகரான போர்ட் பிளேருக்கு மாற்றப்பட்டுள்ளார். “பொது நன்மை காரணமாக உடனடியாக” அவர் மாற்றப்படுவதாகவும் அவர் பொது நன்மையை கருதி உண்டனடியாக புதிய இடத்தில் பணிக்கு சேர வேண்டும் எனவும் மாற்றல் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு உத்தரவின் மூலம் பாசியின் குழுவில் இருந்த முக்கிய அதிகார்கள் பணி மாற்றம் செய்யப்பட்டு அந்த பொறுப்புகள் வேறு அதிகாரிகளுக்கு தரப்பட்டுள்ளது.
.