டில்லி

டில்லியில் உள்ள முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் வீட்டு வாசலில் சிபிஐ நோட்டிஸ் ஒட்டி உள்ளது.

மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவர்  பீட்டர் முகர்ஜிக்குச் சொந்தமானது ஐஎன்எக்ஸ் மீடியா தொலைக்காட்சி நிறுவனம். இந்நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரிய அனுமதியை முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் விதிமுறைக்கு மீறிப் பெற்றுத் தந்ததாக ப சிதம்பரம் மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்த நடவடிக்கையில் சிதம்பரத்துடன் அவர் மகன் மற்றும் சிவகங்கை மாவட்ட மக்களை உறுப்பினர் கார்த்தி உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு ஆகியவை தொடர்ந்த  வழக்கில் கார்த்தி சிதம்பரம் ஜாமீனில் இருக்கிறார். ப சிதம்பரம் இந்த வழக்கு விசாரணையில் போதிய ஒத்துழைப்பு அளிக்காததால் அவரை கைது செய்து விசாரிக்க அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. இதையொட்டி டில்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் முன் ஜாமீன் கோரி மனு அளித்திருந்தார். அந்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. அதையொட்டி அவரைக் கைது செய்ய சிதம்பரத்தின் இல்லத்துக்கு சிபிஐ சென்றது.

ஆனால் சிதம்பரம் அங்கு இல்லை என்பதால் சிபிஐ சிதம்பரம் வீட்டு வாசலில் நோட்டிஸ் ஒன்றை ஒட்டி உள்ளது. அந்த நோட்டிஸில் இந்த வழக்கு குறித்த விசாரணைக்குச் சிதம்பரம் சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனவும் இதனால் இந்த நோட்டிஸை பெற்ற 2 மணி  நேரத்துக்குள் சிபிஐ உதவி சூப்பிரண்ட் அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.